×

தேனியில் வேலு நாச்சியார் அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு-மலர்தூவி மக்கள் மரியாதை

தேனி : தேனிக்கு வந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் அலங்கார ஊர்திக்கு, கலெக்டர் உள்ளிட்ட பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.புதுடெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் பங்கேற்க, தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட சுதந்திரத்துக்கு போராடிய வீரர்கள் வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரின் உருவம் தாங்கிய அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று பொதுமக்களின் பார்வைக்கு நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, வீரமங்கை வேலுநாச்சியாரின் அலங்கார ஊர்தி தேனி பங்களாமேடு பகுதியில் நேற்று பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தப்பட்டது.

அலங்கார ஊர்திக்கு கலெக்டர் முரளிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, போலீஸ் எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், தேனி நகர திமுக பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வக்கீல் ராஜசேகர், ஜீவா, பெரியகுளம் நகர திமுக பொறுப்பாளர் முரளி ஆகியோர் அலங்கார ஊர்தி வரவேற்று வேலுநாச்சியார் உள்ளிட்ட உருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஊர்தி நிறுத்தப்பட்ட இடத்தில் நாதஸ்வரம் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள், ஒயிலாட்ட நிகழ்ச்சி, மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

ஊர்தியில் இருக்கும் வீரர்கள்

45 அடி நீளம், 22 அடி உயரம் 13.5 அடி அகலம் கொண்ட அலங்கார ஊர்தியில் வேலு நாச்சியார் மற்றும் அவரது போர்ப்படை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பெண்கள் படையில் இருந்த வீரப்பெண் தளபதி குயிலி, வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், பூலித்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன் ஆகியோரின் உருவச்சிலைகளும் ஊர்தியில் இடம் பெற்றிருந்தன.

Tags : Velu Nachiyar ,Malarduvi , Theni: Veeramangai Velu Nachiyar's decorative vehicle to Theni was warmly welcomed by the public including the Collector.
× RELATED பீகார் மாநிலத்தில் 2-வது நாளாக...